சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமத்துவத்தை உறுதி செய்துள்ளது பாஜக அரசு!
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டுவதை அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்றும், பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஏப். 30) நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.
அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமித் ஷா பதிவிட்டுள்ளதாவது,
''பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சமத்துவம் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியாக உள்ளபோதும் சரி, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்தன.
அரசின் இந்த முடிவு பின்தங்கிய மக்களை பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் முன்னேற்றுவதற்கான பாதையை அமைத்துக்கொடுக்கும்'' எனக் குறிப்பிட்டார்.
இதேபோன்று வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை ஏற்றது பாஜக - ராகுல்