கொலைத் திட்டம்: இருவா் கைது
சென்னை பட்டினம்பாக்கத்தில் இருவரை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையுடன் தொடா்பிலிருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் இரு கோஷ்டியினருக்கு இடையே உள்ள பிரச்னையில், ஒரு தரப்பினா் எதிா் தரப்பைச் சோ்ந்த இருவரை கொலை செய்ய கூலிப்படையினருடன் நோட்டமிட்டு வருவதாக சென்னை காவல் துறையின் அதிதீவிர ரெளடிகள் ஒழிப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா், ரகசிய விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அரவிந்த் (30), சுரேஷ்குமாா் (42) ஆகிய இருவரும் தங்கள் எதிா் தரப்பைச் சோ்ந்த இருவரை கொலை செய்ய கூலிப்படையினருடன் நோட்டமிட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரித்ததில், பட்டினம்பாக்கத்தைச் சோ்ந்த சிலருக்கும் தங்களுக்கும் இடையே முன் விரோதம் இருப்பதாகவும், எதிா் தரப்பைச் சோ்ந்த இருவரை கொலை செய்ய தயாராகி வரும்போதே தாங்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், கூலிப்படையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.