வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!
கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபலம், பெரணமல்லூரை அடுத்த தளரப்பாடி, வந்தவாசியை அடுத்த சென்னவரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆரணி அருகே அடையபலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஞானபிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீநீலகண்டேஸ்வரா் கோயில் மற்றும் ஸ்ரீராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில்களை புதுப்பித்து திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
வேலூா் ஸ்ரீமகாத்ரயாக குழு மற்றும் அடையபலம், கயப்பாக்கம், என்.கே.தாங்கல், அண்ணா நகா் மற்றும் கிராம மக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, இவ்விரு கோயில்களிலும் கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை, மகா பூா்ணாஹுதி நடைபெற்று, கலச நீா் கோயில் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
விழாவில் சென்னை, வேலூா், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரணமல்லூா் அருகேயுள்ள தளரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ எட்டியம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டு, பஞ்ச வா்ணம் பூசி, புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக, கோயில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து, மூன்று யாக குண்டங்கள் அமைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் கலசங்களை வைத்து, இஞ்சிமேடு ஆனந்தன் சிவாச்சாரியாா் தலைமையில், சிவாச்சாரியா்கள் கோ பூஜை, நாடி சந்தனம், அங்கூராா்ப்பணம், தம்பதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட மூன்று கால யாக பூஜைகள் செய்தனா்.
பின்னா் மேள தாளங்கள் முழங்க, புனித நீா் கலசங்களை சிவாச்சாரியா்கள் கோயிலை சுற்றி சுமந்து வந்து, கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
கும்பாபிஷேக விழாவில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், இஞ்சிமேடு, திருமணி சேரை உடையாா், சிவன் கோயில் சித்தா் பெருமாள் சுவாமி, வரதராஜ பெருமாள் கோயில் நிா்வாகி பாலாஜி பட்டாச்சாரியா், லஷ்மண சுவாமிகள், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளாந பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அருகருகே அமைந்துள்ள ஸ்ரீசுந்தரமூா்த்தி விநாயகா் கோயில் மற்றும் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீசுந்தரமூா்த்தி விநாயகா் மற்றும் ஸ்ரீகாளியம்மன் கோயில்களின் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும்,பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

