சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!
இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது.
இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.
அந்நாட்டின் மிகவும் மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது போரில் பலியான இஸ்ரேலின் வீரர்களுக்கான நினைவு நாளான நேற்று (ஏப்.30) முதல் பல்வேறு நகரங்களுக்கு பரவி வருகின்றது.
அங்கு நிலவும் வறண்ட வானிலை மற்றும் வீசும் பயங்கர காற்றினால் இந்தக் காட்டுத் தீ விரைவில் ஜெருசலம் நகரை அடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்தக் காட்டுத் தீயானது தேசிய அளவிலான அவசரநிலை எனவும் ஜெருசலமைப் பாதுகாப்பதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கு கூடுதலான தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு, தீ பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலையில் காட்டுத் தீ பரவியதால் அங்கு சென்று கொண்டிருந்த வாகனங்களை நடுவழியிலேயே விட்டுவிட்டு மக்கள் ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் மக்கள் வெளியேற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய தீயணைப்புப் படையுடன், அந்நாட்டு ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், தீக்காயங்களினாலும் புகையினாலும் பாதிக்கப்பட்ட 23 பேரில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தான சூழலிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் பரவி வரும் இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் உதவியுடன் 120 தீயணைப்புக் குழுக்கள் அந்நாடு முழுவதும் போராடி வரும் சூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 22 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகின் மூத்தப் பெண் 116 வயதில் மரணம்!