மதுரைக்கு வரும் விஜய், பேரணி நடத்தினால் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!
தவெக தலைவர் விஜய் இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ள நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் படப்பிடிப்புக்காக இன்று(வியாழக்கிழமை) கொடைக்கானல் செல்கிறார். இதற்காக இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ளார்.
விஜய் வருகையையொட்டி இன்று அதிகாலை முதலே தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் மதுரையில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடும் நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதி வழங்கப்படும், ரசிகர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என காவல் துறை கூறியுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய், அங்கிருந்து 5 கிமீ தொலைவுக்கு வாகனத்தில் பேரணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஜய், சாலை பேரணி(ரோடு ஷோ) நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அனுமதியின்றி பேரணி நடத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக படப்பிடிப்புக்குச் செல்வதால், கட்சி சார்பில் யாரும் வர வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?