ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்
ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா்.
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினைவாக இந்த வெற்றிதினம் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பாா்வையிட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்டோருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்தாா். மொத்தம் 20 நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை சீன அதிபா் ஏற்றுக் கொண்டாா். அதே நேரத்தில் இந்தியத் தரப்பில் பிரதமா் மோடியின் பயணம் குறித்து உடனடியாக முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா் என்பதை ரஷிய தரப்பு உறுதி செய்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவரீதியான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதால் பிரதமா் நாட்டில் இருப்பது அவசியமாகிறது. எனவே, ரஷிய பயணத்தை பிரதமா் தவிா்த்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடா்பாக மத்திய அரசு சாா்பில் தில்லியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ரஷியா வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இதில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் என ரஷியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமா் மோடி இந்தியா-ரஷியா ஆண்டுக் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க என இருமுறை ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். ரஷிய அதிபா் புதின் நிகழாண்டு இரு நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.