தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்
மிஸ் பண்ணிய தலைவர், டிக் செய்த ஜெயலலிதா 'நேருக்கு நேர்' ரபி பெர்னார்டு |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 7
ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து, ரசிகர்களால் தீவிரமாக கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அவரைச் சந்திக்க முடியாமலே போயிடுச்சு!
ஞாயிற்றுக் கிழமை வந்தால் ஒரு படம், வெள்ளிக்கிழமை இரவு சினிமாப் பாடல்கள்... மற்ற நாட்களின் பல நேரங்களில் பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள் எனப் போய்க் கொண்டிருந்த தூர்தர்ஷனைப் பின்னுக்குத் தள்ளி, சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என கலர்ஃபுல் நிகழ்ச்சிகளுடன் தனியார் சேட்டிலைட் சேனல்கள் களமிறங்கிய நேரம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தாண்டி அரசியல் பேட்டிகள், விவாத மேடைகள், தேர்தல் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் என அந்த ஏரியாவிலும் சில ஆளுமைகள் பளிச்சென தனித்துத் தெரிந்தனர். அந்தப் பட்டியலை எடுத்தால் நிச்சயம் ரபி பெர்னார்டுக்கு முதலிடம் தரலாம்.

டிவி முகமாக பிரபலமாவதற்கு முன் பத்திரிகையாளர், கல்லூரி வேலை, வெளிநாட்டு ரேடியோ வேலை என பல தளங்களில் இயங்கி வந்தவர் இவர். தெளிவான தமிழ் உச்சரிப்பு பேட்டிகளின் போது ஆழமான கேள்விகள் போன்றவையே இவரது நிகழ்ச்சிகளை நோக்கி ரசிகர்களைத் திருப்பியது எனச் சொல்லலாம்.
'நேருக்கு நேர்' என்ற நிகழ்ச்சி மூலம் இவர் பேட்டி எடுத்த ஆளுமைகள் ஏராளம்.
''நிறைய தலைவர்களை, பிரபலங்களை அந்த நிகழ்ச்சிக்காகச் சந்தித்தேன். ஒவ்வொருவரிடமிருந்து ஏதாவதொரு விஷயம் எனக்குப் படிப்பினையாகக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கும் பெரிய ரீச் கிடைத்தது. தமிழ்நாடு முழுக்க இந்த நிகழ்ச்சிக்காகப் பயணம் செய்திருக்கிறேன். அதெல்லாம் இன்றும் மறக்க முடியாத அனுபவங்கள். ஒரு அனுபவம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போனது. அது மட்டும்தான் இன்று வரை வருத்தம்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைப் பேட்டி எடுக்க முடிவு செய்திருந்தோம். அவர்கள் தரப்பிலும் சம்மதம் பெறப்பட்டு பேட்டிக்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. கிளம்புவதற்கு இரு தினங்கள் இருந்த நிலையில், இலங்கை ராணுவம் திடீரென புலிகள் பகுதியில் பெரியதொரு தாக்குதலை நிகழ்த்த, எங்களது பேட்டி ஏற்பாடுகள் அப்படியே கைவிடப்பட்டது'' என நீண்ட இடைவெளிக்குப் பிறகான தனது நேர்காணலில் நம்மிடம் பேசியிருந்தார் அவர்.

போயஸ் கார்டனிலிருந்து போன்
டிவி பிரபலமாக இருந்தவர் எப்படி மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்?
அது பெரியதொரு வாய்ப்பு எனச் சொல்லலாம்.
சன் டிவியில் பிரபலமானவருக்கு விஜய் டிவி, ஜெயா டிவி என போட்டி சேனல்கள் வலை வீசின. வந்த வாய்ப்புகளை லாவகமாக அதாவது தெளிவாக கையாண்டார். விஜய் டிவியிலும் சில காலம் பணிபுரிந்தார். ஜெயா டிவிக்கும் சென்றார்.
ஜெயா டிவியில் இவர் இருந்த காலங்களில் அந்த டிவியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கவனித்து ரசித்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வை இவர் மீது பட்டது. இவரது தமிழை ரொம்பவே ரசித்த ஜெயலலிதா தன்னுடைய பிரசாரப் பயணங்களின் போது, அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட வேலைகளை இவருக்குக் கொடுத்தார்.
ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே நம்பிக்கையான ஒருவராகி விட்டார்.
'தமிழ்ல்ல ஒரு பழமொழி சொல்வாங்க இல்லையா, கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்'னு. அப்படித்தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. திடீர்னு ஒருநாள் போயஸ் கார்டன்ல இருந்து அழைப்பு. என்னமோ ஏதோனு கிளம்பி போனேன். ரொம்ப நாளா உங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சிட்டிருந்தேன். இப்ப ராஜ்யசபாவுல் சில சீட்டுகளுக்கு தேர்தல் வருது. உங்களை அங்க அனுப்பணும்னு விருப்பப் படுறேன்.. உங்க விருப்பம் என்ன'னு ஆங்கிலத்துலயே கேட்டார்.
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. ஏன்னா அந்த நொடி வரை எனக்கு அப்படியொரு கேள்வியை எதிர்கொள்வேன்னு கூட நினைச்சுப் பார்த்ததில்லையே, 'நீங்க சொன்னா சரி மேடம்'னு சொல்லி நன்றி தெரிவிச்சேன். அதேபோல ஒரு பீரியட் ராஜ்ய சபா உறுப்பினராகவும் என் மனசாட்சி திருப்தியடையற அளவுக்கு கடமை ஆற்றினேன்'' எனத் தான் எம்.பி. ஆனது குறித்துக் குறிப்பிடுகிறார் ரபி.
கட்சியும் வேணும், குடும்பமும் வேணும்..
எம்.பி, ஆனது முதலே முழுநேர அதிமுக உறுப்பினர் ஆகி விட்டார் எனச் சொல்லலாம். அது முதலே டிவியில் எப்போதாவது அதுவும் ஜெயா டிவியில் மட்டுமே வருவார். தேர்தல் நேரங்களில் அதிமுக வெற்றி முகத்தில் இருந்தால் தொடர்ந்து அதுகுறித்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பார். அந்தக் கட்சிக்குத் தோல்வி உறுதி எனத் தெரிந்து விட்டால் நிகழ்ச்சி பாதியில் முடிந்ததெல்லாம் கூட நடந்திருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருக்கிறாரா? யாருடன் இருக்கிறார். தற்போது எங்கிருக்கிறார்? கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லையா? எனப் பல கேள்விகள் எழ எல்லாக் கேள்விகளுக்கும் விடை தேடினோம்.

''சந்தேகமே வேண்டாம். ஜெயலலிதா மீது ரொம்பவே பாசம் கொண்டவர் அவர். அதிமுகவில் தான் இருக்கிறார். அதுவும் எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு இன்றும் அதிமுக விசுவாசியாகவே தொடர்கிறார். இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சொல்ல வேண்டுமெனில் கட்சிக்கு, தலைமைக்கழகத்துக்கு அவ்வப்போது அறிக்கைகள் தயார் செய்து தருவது உள்ளிட்ட சில வேலைகள் இப்போதும் செய்து வருகிறார்.
அதேநேரம் பல வருடங்களாக மீடியா, அரசியல் என ஓடியதால் இப்ப ஓய்வெடுக்கலாமே என இவரது குடும்பத்தினர் அன்புக் கோரிக்கையும் வைக்கவே, அவர்களுக்கும் காது கொடுக்க வேண்டிய நிலையிலிருக்கிறாராம்'' என்கிறார்கள் அவருடன் தொடர்பிலிருக்கும் நண்பர்கள்.

அதன்படி, தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் மகள்கள் மூன்று பேர் வீட்டிலும் கொஞ்ச கொஞ்ச நாட்கள் தங்கி பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்து வருகிறார்
சென்னையில் இருந்தால் கட்சி நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பது, கட்சிப் பிரமுகர்களைச் சந்திப்பது என அந்த வேலைகளையும் தவறவிடுவதில்லையாம்.!