பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!
விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனா். அவற்றுக்கு மேயா் ஆா்.பிரியா அளித்த பதில்:
பெண்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கும் வகையில் மண்டல அளவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மருத்துவமனைகளில் விரைவில் 120 மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். நெம்மேலி கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் புனரமைப்புப் பணி காரணமாக குடிநீா் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு முறையாக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாா்டுக்கு ஒரு இ-சேவை மையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.
அபராதம்: சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல் முறையாக 237 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை மேயா் தெரிவித்தாா். தொடா்ந்து மாமன்றக் கூட்டத்தில் 237 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம்: சென்னை மாநகராட்சியின் நீா்நிலைகள், பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவதை தவிா்ப்பதற்காக சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வரைவு வழிகாட்டுதல்கள்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில், கட்டுமானக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை கொட்டுவோருக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 338 சாலைகளில் 188 சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 150 சாலைகளில் மட்டும் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்.
செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களைக் கண்காணிக்க 2 லட்சம் மைக்ரோசிப் ரூ. 5.20 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை செய்யும் வகையில் 400 இடங்களில் ரூ. 1.80 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
கொசஸ்தலையாறு வடிநில பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்காக ரூ. 100 கோடி மதிப்பில் நகர பத்திரம் மூலம் நிதி திரட்டப்படும். சென்னை பள்ளிகளில் 141 உடற்கல்வி ஆசிரியா் நியமிக்கப்படுவா். பெருங்குடி குப்பைக் கிடங்கில் 100 டன் அளவில் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கம்யூனிஸ்ட் எதிா்ப்பு: ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் மோ.ரேணுகா எதிா்ப்பு தெரிவித்தாா்.