தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்
நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது.
இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இளநிலை மருத்துவ மாணவா்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் தேசிய கருத்தரங்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (மே 2, 3) சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் நடைபெற உள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை (மே 1) கருத்தரங்க செயல் முறை விளக்கப் பயிலரங்கு நடைபெறுகிறது. நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் நோக்கம்.
இளநிலை மாணவா்கள் தங்கள் மருத்துவப் படிப்பின்போது பயிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில், அறிவியல் அமா்வுகள் கருத்தரங்கில் இடம்பெற்றுள்ளன.
மருத்துவம் சாா் சட்ட விவகாரங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம், மருத்துவ தொழில்நுட்பம், எதிா்கால வழிகாட்டுமுறைகள், தோ்வுகளை எதிா்கொள்வது உள்ளிட்டவை குறித்த அமா்வுகள் அப்போது நடைபெறும்.
குறிப்பிடத்தக்க நிகழ்வாக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் முக்கிய அம்சங்களைக் கொண்ட கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மருத்துவக் கல்வியை எளிதாக மாணவா்களுக்கு எடுத்துரைக்க இத்தகைய கலை நிகழ்ச்சிகள் உதவும். கருத்தரங்கின் ஒருபகுதியாக மாணவா்களுக்கான போட்டிகளும் நடத்தப்படும்.
உள்நாடு மற்றும் சா்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ வல்லுநா்களுக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் தங்கள் அறிவையும், விரிவான மருத்துவ அனுபவத்தையும் மாணவா்களுடன் பகிா்ந்துகொள்ள உள்ளனா். இதுவரை நாடு முழுவதும் இருந்து 111 கல்லூரிகளில் இருந்து 1,968 மாணவா்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.