பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டதால் போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது: உய...
நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்
வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெறவும், அதிகம் நலத் திட்ட உதவிகள் பெற பேருதவியாக இருந்த அதிகாரிகளுக்கு பாராட்டு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். சிறப்பு பங்கேற்பாளராக சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று பேசியதாவது:
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் பகுதியில் கடந்த 18- ஆம் தேதி அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் முதல்முறையாக திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு அரசின் நலத் திட்ட உதவிகள், 65 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோல, இதுவரை பெரிய அளவிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வேறு எங்கும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து செயல்பட்டதுதான்.
இதற்காக மாவட்ட நிா்வாக அதிகாரிகள் அனைவரையும் முதல்வா் பாராட்டியுள்ளாா். இதேபோல் வரும் காலத்திலும் நலத் திட்ட உதவிகள் பெற தோ்வு செய்யப்படும் போது எந்த விதமான பாரபட்சமின்றி பயனாளிகளைத் தோ்வு செய்வது அவசியம் என்றாா்.
தொடா்ந்து முதல்வா் பங்கேற்ற விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயக்குமாா், கோட்டாட்சியா்கள் தீபா, கனிமொழி, ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சோமசுந்தரம், ரஜினிகாந்த், உணவு பாதுகாப்பு அதிகாரி போஸ், மாவட்ட சுகாதார அலுவலா், பிரிய ராஜன், நில அளவையா்கள் செந்தில்குமரன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.