Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியாவிலேயே முதல்முறையாக, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு உபகரணங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்துக்கு ஈா்த்திட சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்படி, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்துக்கு இணையாக தமிழ்நாடு அரசும் ஊக்கத் தொகை வழங்கும். இதனால், தமிழ்நாட்டில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தியாவில் முதல் முை: ‘மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான சிறப்புத் திட்டத்தை வெளியிட்ட முதல் மாநிலம்-தமிழ்நாடு’ என்று தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மின்னணுவியல் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில் மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு
முதலீடுகளை ஈா்த்திடவும் பிரத்யேக கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கை மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதற்கான சிறப்புத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியன் டாலா் இலக்கு: இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மின்னணு துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு மிகப்பெரிய வளா்ச்சியை எட்டியுள்ளது. 14.6 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு மின்னணு உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த துறையில் 100 பில்லியன் டாலா் இலக்கை அடைய வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். கைப்பேசி கேமரா டிஸ்ப்ளே, ஃபிட்னஸ் ரிங் பேண்ட் ஆகிய தயாரிப்புகள் இதில் முக்கிய இடம் பெறும்.
தமிழ்நாடு முதலீட்டாளா்களுக்கு எதை அறிவித்தாலும் அதை நிறைவேற்றாமல் திமுக அரசு இருந்தது இல்லை. இந்தியாவின் மின்னணு பொருள்கள் உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மின்னணு பொருள்களையும் தயாரிக்க தேவைப்படும் பெருவாரியான மின்னணு உதிரி பாகங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் உருவாகும் ஒரு பொருளின் தரம், மற்ற இடங்களை விட கூடுதல் தரமாக இருக்கும். அதற்கு தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் எல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன.
ஃபோா்டு நிறுவனம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு வளா்ச்சி அடையும். அதை யாராலும் தடுக்க முடியாது என்றாா் அவா்.