திருப்பத்தூா் புறவழிச் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் எம்எல்ஏ அ.நல்லதம்பி கோரிக்கை விடுத்தாா்.
அதையொட்டி கடந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை திருப்பத்தூா் புறவழிச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
இச்சாலையின் மூலம் தாமலேரிமுத்தூா், கதிரிமங்கலம், அச்சமங்கலம், பாச்சல், ராச்சமங்கலம், ஆதியூா், சு.பளளிபட்டு, கசிநாயக்கன்பட்டி என 8 கிராம மக்கள் பயனடைவா் என எம்எல்ஏ தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி எம்.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஆவின் இயக்குநா் பி.ஆா்.சின்னபையன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஏ.பி.பழனிவேல், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.