ரூ.73,750 சம்பளத்தில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்...
HBD Ajith Kumar: `பைக் மெக்கானிக் டு பத்ம பூஷன்' - சினிமாவை தாண்டி அஜித் செய்த ஓஜி சம்பவங்கள்!
நடிகர் அஜித்துக்கு 54-வது பிறந்தநாள் இன்று. எப்போதும் இல்லாததைவிட இந்த வருட பிறந்தநாள் அஜித்துக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிப் பேச்சு குறைவதற்குள், பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் கார் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருந்தார்.
இப்படி அஜித் தொட்ட இடங்களிலெல்லாம் சமீபத்தில் அதிரடி காட்டியிருந்தார். இதோ, இத்தகைய வெற்றிகள் கொடுத்த மகிழ்ச்சி குறைவதற்குள் கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்.

அன்று பைக் மெக்கானிக்காக இருந்த அதே அஜித் குமாரை இன்று 'பத்ம பூஷன் அஜித் குமார்' என அழைக்கிறார்கள்.
இப்படியான மகிழ்ச்சியான விஷயங்களுடன் இந்த வருட பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித்.
சினிமா, ரேஸ் என இரண்டுமே அஜித்தின் கனவுப் பக்கங்கள்தான். இவை இரண்டிலுமே வெற்றி கண்டு இளைஞர்கள் பலருக்கும் ஊக்கம் தந்திருக்கிறார் அஜித்.
சினிமாவைத் தாண்டி ரேஸ், பிட்னெஸ் போன்ற சில விஷயங்களில் அஜித் செய்த 'ஓஜி' சம்பவங்களைப் பார்ப்போமா...
சினிமா, ரேஸ் என இரண்டிலுமே ஒருவர் இயங்குவது மிகவும் சவாலானது. அஜித்தும் இதைச் சமாளிப்பதில் சவால் கண்டிருக்கிறார்.
2003 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சினிமாவில் பயணித்துக் கொண்டே ரேஸிங் பக்கமும் கவனம் செலுத்தினார்.
ஒரு நடிகராக சினிமாவில் உச்சத்தைத் தொட்டு பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த பிறகு, ரேஸிங் துறையில் தொடக்கத்திலிருந்து ஈடுபடத் தொடங்கினார்.

முதலில், சிறிய ரேஸ் பந்தயங்களில் ஈடுபட்டு, படிப்படியாகத் தான் அடுத்தடுத்த கட்ட ரேஸ் பந்தயங்களுக்கு நகர்ந்தார் அஜித்.
இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கும் சென்று பயிற்சி எடுத்தவர், 2003-ம் ஆண்டு 'பார்முலா 2' ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
அப்போதிருந்தே, ரேஸிங் மீதும் மோட்டார் வாகனங்கள் மீதும் அளப்பரிய காதல் கொண்டவர் அஜித்.
ரேஸ் மீதுள்ள காதல் குறித்து, "அதுதான் என் முதல் காதல். என் வாழ்க்கை லட்சியமே ஒரு ரேஸ் வீரனாகறதுதான்.
திடீர்னு தான் சினிமாவுக்கு வந்துட்டேன். சினிமாவுல நிறுத்திக்கப் போராட வேண்டியிருந்தது. ரேஸ்ல இறங்க, சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஓடிட்டே இருந்தேன்.
எந்நாளாவது ஒரு நாள் ரேஸ்ல பிரமாதமா ஜெயிப்பேன். அதுக்காக கடுமையாகப் பயிற்சி எடுக்கிறேன். இன்டர்நேஷனல் லெவல்ல சில போட்டிகளில் நாலாவதா, ஆறாவதா வர்ற அளவுக்கு முன்னேறியிருக்கேன்.
ஒரு நாள் சாதிச்சுக் காட்டுவேன் பாருங்க, அப்போ புரியும் என்னோட எல்லா வலியும்!" என 2004-ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் உணர்ச்சி ததும்ப ரேஸிங் மீதுள்ள காதல் குறித்து பேசியிருக்கிறார் அஜித்.
அவர் சொன்னது போலவே அன்று சில வெற்றிகளை அடுக்கினார். இதோ, இன்றும் பல சர்வதேச கார் பந்தயங்களில் வெற்றிகளைப் பதித்து சாதனை படைத்து வருகிறார்.
இப்படி ரேஸிங் சமயத்தில் அஜித் நடித்த 'ஆஞ்சநேயா' திரைப்படம் நினைத்த அளவுக்கு திரையரங்குகளில் சோபிக்கவில்லை.
அந்தச் சமயத்தில் பலரும், "அஜித்துக்கு சினிமாவில் ஆர்வமும் குறைஞ்சு போச்சு. ரேஸிங் ரேஸிங்னு கிளம்பிடுறார்," எனப் பலரும் புகார் கூறி பேசவும் எழுதவும் செய்தார்கள்.
ஆனால், இப்படியான பேச்சுகளைப் பெரிதாக செவிகளுக்கு எடுத்துக் கொள்ளாமல், அடுத்து 'அட்டகாசம்' படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார்.
இப்படியானவர் 2005-ல் தன்னுடைய ரேஸிங் கரியருக்கு முட்டுக்கட்டை போட்டார். ரேஸிங் களத்திலிருந்து விலகிய அவர், ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தில் திரைப்படங்களைக் கொடுக்க முடிவு செய்து மும்முரமாக ஈடுபட்டார்.
ரேஸிங் துறையிலிருந்து விலகியது ஏதாவது வருத்தம் இருக்கிறதா என அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இப்ப எதுக்கு அதை ஞாபகப்படுத்தறீங்க? நான் ரேஸ்ல ஓட்டும்போது, யாரும் சப்போர்ட் பண்ண வரலியே? யு.கே. போய் இரண்டு வெற்றிகள் கிடைச்சுது.
அந்தச் சந்தோஷம் மட்டும்தான் இப்போ மிச்சமிருக்கு. இங்கே வேண்டியது எல்லாம் சினிமா வெற்றிதான்! 'அஜித் ஒழிஞ்சான்'னு நினைச்சாங்க... மீண்டு வந்திருக்கேன். இனிமே, என் திட்டங்களை நான் பேசுறதா இல்லைங்க... ஆக்ஷன்தான்!" என அதிரடி வார்த்தைகளை 2005-ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ரேஸிங்கில் 6 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டு 2010-ம் ஆண்டு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
ரேஸிங் மூலமாக விபத்துகளையும் சந்தித்திருக்கிறார் அஜித். இதுபோன்ற விபத்துகளுக்குப் பிறகு முதுகில் ஆபரேஷன் செய்து கொண்ட அஜித்துக்கு,
'உல்லாசம்' படத்தின் சமயத்தில் முதுகு வலி துடித்துடிக்க வைத்திருக்கிறது. அப்படியான வேளையில் உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனாலும், தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கமிட்மென்ட்கள் அத்தனையையும் முடித்து விட்டுத் தான் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்.
சரியாக, 1999-ல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஒன்பது ஆபரேஷன்களை மேற்கொண்டார் அஜித்.
ரேஸிங் ஒரு புறம் என்றால், 2005-ம் ஆண்டு மரம் நடுவதிலும் அஜித் ஆர்வம் காட்டினார். 2005-ம் ஆண்டு திருவான்மியூரில் மரக்கன்றுகளை நட்டு அமர்களப்படுத்தியிருந்தார் அஜித்.
அப்போது இதுபோன்ற மரங்களை நட்டிய பிறகு அஜித், "நடிகனா இருக்கிறது சௌகரியம். நாம ஏதாவது நல்ல விஷயம் சொன்னால் கவனிப்பாங்க, காது கொடுத்துக் கேட்பாங்க. அசோகர் தான் மரம் நடணுமா... அஜித்தும் நடலாமேனு தோணிச்சு. நாட்டுக்காகச் செய்றோம்னு இல்லை... இதெல்லாம் நமக்காகவே செஞ்சுக்கிற நல்ல விஷயங்கள்தானே!
அஜித்குமார் கிராப் வெச்சுக்கிட்டா, அதே ஸ்டைல்ல ஹேர்கட் பண்றாங்க.

நான் ஒரு டிஸைன்ல சட்டை போட்டால், அதே மாதிரி வாங்கிப் போட்டுக்கறாங்க. அதனால, நாம் ஒரு நல்லது செஞ்சா அதை அவங்களும் செய்வாங்களேனு தோணிச்சு. இதோ, இப்போ நானே திருவான்மியூர் முழுக்க மரக்கன்றுகளை நட்டு இந்த விஷயம் ஆரம்பிச்சேன்.
என் ரசிகர்களையும் மரக்கன்று நடச் சொன்னேன். சென்னையின் ஒவ்வொரு மூலைக்கும் நானே மரக்கன்றுகள் கொண்டு வந்து தர ரெடி. ஆனால், அதை நட்ட பிறகு தினமும் இரண்டு சொம்பு தண்ணீர் நீங்கதான் ஊத்தணும்!" எனக் கூறியிருந்தார்.
அஜித் ஒரு விஷயத்தை நினைத்து விட்டால், அதில் உறுதியாக நின்று கம்பேக் கொடுப்பதில் பெயர் போனவர். 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு சமயத்தில் எப்போதும் போல எடை கொண்ட தோற்றத்தில் காட்சியளித்த அஜித், திடீரென ஆள் அடையாளமே தெரியாதது போல உடல் எடையைக் குறைத்தார்.
படத்தில் வரும் தோற்றத்திற்காகவும், கார் ரேஸுக்காகவும் அவருடைய உடல் எடையை குறுகிய காலத்தில் பெரும் உழைப்பைச் செலுத்தி குறைத்திருந்தார். இப்படி உடல் எடையை சட்டென குறைப்பது அஜித்துக்கு புதிய விஷயமல்ல.

'பரமசிவன்' படத்தின் சமயத்தில் அஜித் சட்டென 18 கிலோவை இரண்டே மாதங்களில் குறைத்திருந்தார்.
இயக்குநர் பி. வாசு இயக்கும் 'பரமசிவன்' படத்தின் பூஜைக்கு அப்போது ரஜினி வருகை தந்திருந்தார். அஜித்தின் இந்த பிட்னெஸ் டயட்டைப் பார்த்து ரஜினியே ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
இப்படியான விஷயங்களைத் தாண்டி, போட்டோகிராஃபி, சமையல் போன்ற பக்கங்களிலும் அஜித் கவனம் செலுத்துவதுண்டு!
இதுபோல அஜித் செய்த 'ஓஜி' சம்பவங்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்!