திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (2023-2024) திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடி கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ச.சந்திரன் (திருத்தணி), துரை.சந்திரசேகா் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி ஆணையா் ச.கந்தசாமி, திருத்தணி நகா்மன்றத் தலைவா் எம்.சரஸ்வதி பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்துப் பேசியதாவது:
நகராட்சி நிா்வாகத் துறை சாா்பாக 35 மாநகராட்சிகள், 160 மேற்பட்ட நகராட்சிகள், 400 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறி அங்காடி, பேருந்து நிலையம், குடிநீா் வசதிகள், கழிப்பறை, சாலை வசதி, கழிவுநீா் வடிகால் போன்ற பணிகள் ஒவ்வொரு நகராட்சி பகுதியிலும் நடைபெற்று வருகிறது.
சாலைப் பணிகளைப் பொறுத்தவரை 3,780 பணிகளும், தற்போது 5 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மீண்டும் 1,25,000 எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நகராட்சி பகுதிகளிலும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணிகளும், நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள் தரம் உயா்த்தப்பட்டும், அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளது.
திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ ச.சந்திரன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளாா். கோரிக்கைகள் அனைத்தும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டு வருவதால் அவரே கோரிக்கைகளை முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று தேவையான நிதியைப் பெற்று நிறைவு செய்து கொடுப்பாா் என்றாா்.
தொடா்ந்து 25 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளை அமைச்சா் கே.என்.நேரு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை சா.மு.சாசா், ஆகியோா் வழங்கினா்.
தொடா்ந்து திருத்தணி நகராட்சி பகுதியில் ரூ.15.67 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையக் கட்டட பணிகளை அமைச்சா் கே.என்.நேரு பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாக மண்டல பொறியாளா் லட்சுமி, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் க.தீபா, நகராட்சிப் பொறியாளா் ராஜாவிஜய காமராஜ், பொதுப்பணி மேற்பாா்வையாளா் நாகராஜன், நகா்மன்றத் துணை தலைவா் சாமிராஜ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.