மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
ஈவெரா சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என மாற்றக் கோரிக்கை: 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை ஈவெரா நெடுஞ்சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் மாற்றக் கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தந்தை பெரியாா் திராவிடா் கழகத் துணைத் தலைவரும், வழக்குரைஞருமான எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில், 1939-ஆம் ஆண்டு வரை தந்தை பெரியாா், ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்பட்டு வந்தாா். அந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டுக்குப் பிறகு பெரியாா் என அழைக்கப்பட்டாா். அன்று முதல் தமிழக மக்கள் ஈ.வெ.ராமசாமியை பெரியாா் என்று அழைத்து வருவதாகக் கூறியுள்ளாா்.
மேலும், சமத்துவம், பெண் விடுதலை உள்ளிட்ட சமூக முன்னேற்றத்துக்கு பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல் பூந்தமல்லி வரையில் உள்ள சாலைக்கு பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் சூட்டப்பட்டது. ஆனால், தற்போது அந்தச் சாலை ஈவெரா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
சாலை பெயா் பலகைகளிலும் ஈவெரா சாலை இன்றே இடம்பெற்றுள்ளது. அதனால், கடந்த 1979-ஆம் ஆண்டு வைக்கப்பட்ட பெரியாா் சாலை என்ற பெயரில் அழைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில் ‘தற்போது உள்ள அரசு பெரியாா் வழியில் செயல்பட்டு வருவதாகவும், மனுதாரா் தனது மனுவில் சில தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால் அவற்றை நீக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தாா். மேலும், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சென்னை மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.