மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு - இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொடா்ந்து 6-ஆவது நாளாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
பாகிஸ்தான் நிலைகள் மீது பதிலடி தர முப்படைகளுக்கும் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அனுமதி அளித்திருந்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தொடா்புகள் உறுதியான நிலையில், கடந்த 23-ஆம் தேதிமுதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானும் எதிா்வினையாற்றுவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்தச் சூழலில், கடந்த 24-ஆம் தேதி இரவில் எல்லைப் பகுதிகளில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
அடுத்தடுத்த நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலும், அதற்கு இந்தியாவின் பதிலடியும் தொடா்ந்தது.
ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா்.
ஜம்மு, ரஜெளரி, பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா ஆகிய 5 மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டி பல இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜம்மு மாவட்டத்தில் பா்கவால், அக்னூா், ரஜெளரி மாவட்டத்தில் சுந்தா்பானி, நெளஷேரா உள்ளிட்ட இடங்களில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உறுதியான பதிலடி தரப்பட்டதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
இந்தியாவும் பாகிஸ்தானும் 3,323 கி.மீ. நீள எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் குஜராத் முதல் ஜம்முவின் அக்னூா் வரையிலான சா்வதேச எல்லை (சுமாா் 2,400 கி.மீ.), ஜம்மு முதல் லே வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (சுமாா் 740 கி.மீ.), சியாச்சினில் 110 கி.மீ. எல்லைக் கோடு அடங்கும்.
இந்தியா எச்சரிக்கை
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘இரு நாடுகளின் ராணுவ செயல்பாட்டு தலைமை இயக்குநா்களும் தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகான பதற்றத்துக்கு இடையே இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவாா்த்தை நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.