கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
பஹ்ரைன் சிறையில் வாடும் இடிந்தகரை மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி
பஹ்ரைன் நாட்டு சிறையில் உள்ள இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தினப்படிக்கான ஆணையை பேரவைத் தலைவா் மு. அப்பாவு சனிக்கிழமை வழங்கினாா்.
இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்கள் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஈரான் நாட்டு கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்தனா்.
அவா்கள் ஈரான் நாட்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, பஹ்ரைன் நாட்டு கடல் எல்கைக்குள் சென்றுவிட்டனராம். இதையடுத்து பஹ்ரைன் நாட்டு கடலோர காவல் படையினா் 28 மீனவா்களையும் கைது செய்து பஹ்ரைன் சிறையில் அடைத்தனா்.
சிறையிலிருக்கும் மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தாா்.
இதையடுத்து தமிழக முதல்வா், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தாா்.
இந்நிலையில் பஹ்ரைன் சிறையில் இருக்கும் மீனவா் குடும்பங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் தினப் படியாக நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 12.09.2024 முதல் 11.10.2024 முடிய 30 நாள்களுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வீதம் 28 மீனவ குடும்பங்களுக்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையை பேரவைத் தலைவா் மீனவா்கள் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை, இடிந்தகரை பங்குத் தந்தை சதீஷ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.