பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!
பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்டு இந்திய வீரர்கள் சிறப்பான பதிலடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணியினர் கை குலுக்காததற்கு என்ன காரணம்? என்பதற்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.
ஆட்டம் தொடங்குவதற்கு முன் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்திய வீரர்களை பந்துவீச பணித்தது.
இந்த நிலையில், டாஸ் சுண்டப்பட்ட பின் இரு அணி கேப்டன்களும் கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரியப்படி கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வதே வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு கடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.
அதன்பின் ஆட்டம் முடிவடைந்ததும், அதே பாணியில், இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.
இந்த நிலையில், ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் செய்த செயல் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை(செப். 14) நள்ளிரவு ஆட்டம் நிறைவடைந்தபின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது, “நமது அரசும் பிசிசிஐ-யும் ஓரணியில் பிணைந்து செயல்படுகின்றன. நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட்டேன். இதன்மூலம், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.
ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையில் ஒருசில விஷயங்களை விளையாட்டைவிட முதன்மையானதாகக் கருத வேண்டும். பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு துணையாக நிற்கிறோம்.
நான் ஏற்கெனவே சொன்னது போல, இந்த வெற்றியை நமது துணிச்சலான படை வீரர்களுக்கு, ’ஆபரேஷன் சிந்தூரில்’ ஈடுபட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என்றார்.
சூர்யகுமார் யாதவின் இதே கருததியே இந்திய அணியின் பயிர்சியாளர் கௌதம் கம்பீரும் வெளிப்படுத்தியுள்ளார்.