பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!
விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக இருக்கிறது. அந்த இடத்தை மாற்றி வேறு இடம் வழங்க வேண்டும்" என்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு மாற்று இடம் வழங்க ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டார். ஆனால் பூங்கொடி வீட்டுக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே வழங்கிய இடத்திற்கு அருகிலேயே உள்ள இடத்தை அளந்து அந்த இடத்தை வாங்கிக் கொள்ள வலியுறுத்தி கையெழுத்தும் வாங்கி உள்ளனர். ஆனால், பூங்கொடி அப்பகுதியில் உள்ள இடம் தவிர வேறு பகுதியில் இடம் வழங்கக் கோரியுள்ளார்.

வேறு இடம் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூங்கொடி நுழைவு வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பணியில் இருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.