டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!
கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?
மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்ஷரில் இருந்த டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கார் டிரைவர் சிமெண்ட் மிக்ஷர் லாரி கிளீனர் குமாரை தன்னுடன் போலீஸ் நிலையம் வரும்படி கேட்டுக்கொண்டார். கிளீனர் குமாரும் அவருடன் சென்றார். அவரை கட்டாயப்படுத்தி காரில் இருந்தவர்கள் அழைத்து சென்றனர். ஆனால் அதன் பிறகு குமாரை லாரி டிரைவர் சந்த்குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து சந்த்குமார் இது குறித்து சிமெண்ட் மிக்ஷர் லாரி உரிமையாளர் விலாஸிடம் தெரிவித்தார். விலாஸும், சந்த்குமாரும் சேர்ந்து லாரி கிளீனரை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து விலாஸ் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே லாரி கிளீனர் குமாரை தேட ஆரம்பித்தனர். லாரி லேசாக உரசிய கார் நம்பரை பார்த்து அது யாருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். அக்கார் பூஜா ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அக்கம்பெனியின் முகவரியை தேடி போலீஸார் சென்றனர். அம்முகவரி புனேயில் இருந்தது. அது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கர் வீடு என்று தெரிய வந்தது. போலீஸார் அங்கு சென்றபோது பூஜாவின் தாயார் மனோரமா வீட்டு கதவை திறக்க மறுத்தார். போலீஸார் நீண்ட நேரம் போராடிய பிறகு மனோரமா கதவை திறந்தார். உள்ளே சோதனை செய்து பார்த்தபோது லாரி கிளீனர் குமாரை உள்ளே அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீஸார் மீட்டனர். கார் டிரைவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸார் விசாரணைக்காக மீண்டும் அதே வீட்டிற்கு சென்ற போது கதவு பூட்டப்பட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி மனோரமாவிற்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். பூஜா கேட்கர் தனது பெயர், சாதியை மாற்றி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றதாக கூறி அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஒரு ஆண்டு கழித்த நிலையில் மீண்டும் கார் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.