முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு இன்று முதல் செப்.17 வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் மூன்று தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அவரது முதல் மாநாடு இதுவாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில் எல்லைப் பாதுகாப்பு, காஷ்மீர் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக முப்படைகளின் மூத்த தலைவர்களின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த மாநாட்டில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆயுதப்படைகள் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும், நாட்டைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்புக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.