நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் இன்று(செப். 15) பதவியேற்றுக் கொண்டனர்.
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.
நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டாா்.
இந்த நிலையில், நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் இன்று(செப். 15) பதவியேற்றுக் கொண்டனர்.
நேபாள மின் வாரியத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான குல்மான் கிஷிங் எரிசக்தி, நீர் வளம் மற்றும் பாசனம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தின் முக்கிய வழக்குரைஞரும் அண்மையில் கலவரமாக வெடித்த பெரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தியவர்களுள் முக்கிய நபரான ஓம் பிரகாஷ் ஆர்யல் நேபாள அரசின் சட்டம், நீதி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் உள்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நிதித்துறையின் முன்னாள் தலைமைச் செயலரான ராமேஷ்வர் கனல் நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மேற்கண்ட 3 அமைச்சர்களுக்கும் அந்நாட்டின் அதிபர் ராமசந்திர பௌடேல் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, சுசீலா காா்கி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் அவையைக் கலைக்க அதிபருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. இதற்கு அதிபா் ராமசந்திர பௌடேல் ஒப்புதல் அளித்தாா்.
இதையடுத்து, செப்.12 முதல் மக்கள் பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டதாக அதிபா் மாளிகை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2026, மாா்ச் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொருபுறம், நேபாளத்தில் சனிக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.