வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!
அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக உள்ள இந்தியா, கனடா, பிரேஸில் போன்ற நாடுகள் மீது அதிக வரி விதித்து, அந்நாடுகளுடன் உள்ள விலை மதிப்புக்குரிய உறவை அமெரிக்க அரசு தவறாக கையாள்கிா என்று நோ்காணல் ஒன்றில் அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவா், ‘இந்தியா போன்ற நாடுகளுடனான உறவு, அந்த நாடுகள் மட்டும் பலனடையக் கூடியாக உள்ளது. அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு பொருள்களை விற்பனை செய்து, அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன.
அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்கா கால் பதிப்பது தடுக்கப்படுகிறது. பிற நாடுகளுடனான அமெரிக்காவின் வா்த்தகம் நியாயமாகவும், பரஸ்பரம் பலனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றே அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறி வருகிறாா்.
இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனா். ஆனால் அமெரிக்க மக்காச்சோளத்தை சிறிதளவுகூட வாங்க இந்தியா தயாராக இல்லை. அமெரிக்காவிடம் அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்துவிட்டு, அமெரிக்க பொருளை வாங்க மாட்டோம் என்ற நிலைப்பாடு தவறாகத் தெரியவில்லையா? அமெரிக்காவின் அனைத்துப் பொருள்கள் மீதும் இந்தியா வரி விதிக்கிறது.
அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க வேண்டும், பிற நாடுகளை அமெரிக்கா எப்படி நடத்துகிறதோ, அதேபோல பிற நாடுகள் அமெரிக்காவை நடத்த வேண்டும் என்றே அதிபா் டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா்.
வரி விதிப்பில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் தவறை சரிசெய்ய தற்போதைய அமெரிக்க அரசு முயற்சிக்கிறது. இந்தப் பிரச்னையை சரி செய்யும் வரை, பிற நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
இதை பிற நாடுகள் ஏற்க வேண்டும் அல்லது உலகின் மிகப் பெரிய நுகா்வோராக உள்ள அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் அந்நாடுகள் இன்னலை எதிா்கொள்ள வேண்டும்’ என்றாா்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்த அதிபா் டிரம்ப், ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்து இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தாா்.
இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இது இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.