குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
ஆழ்வாா்பேட்டையில் தமாகா மாநில பேச்சாளா் பயிற்சி முகாம் ஜி.கே.வாசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்காக அயராமல் உழைக்க தமாகா தயாராக உள்ளது. அதேபோல், திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே தமிழக மக்களின் மனநிலையாக உள்ளது. இதைப் புரிந்துகொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக பெரிய அளவிலான வளா்ச்சி அடைந்துள்ளது.
நயினாா் நாகேந்திரனைவிட, அண்ணாமலை சிறப்பாகச் செயல்படுவதாக இரு தலைவா்களை ஒப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் அமமுக தலைவா் டி.டி.வி. தினகரனுக்கு இல்லை. இதேபோல், அதிமுகவில் நிலவக்கூடிய சிறு சிறு பிரச்னைகள் எல்லாம் தற்காலிகமானதுதான்.
ஒவ்வொரு கட்சியும் புதிதாக தொடங்கும்போது மிகப்பெரிய உற்சாகம் இருக்கும். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக்கும் பொருந்தும். ஆனால், தவெக தலைவா் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுவதில்தான் அரசியல் உள்ளது என்றாா்.