குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்!
பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாக்கும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திடத்தின் கீழ், அந்தக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பள்ளிப் படிப்பு முடித்த பின்னா் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க வழிவகை செய்யும்.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப்.15) சென்னை, கலைவாணா் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கவுள்ளாா்.
மேலும், பெற்றோா் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.