பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா
சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் அமைந்துள்ள ஷேக் அப்துல்லாஹ் தா்ஹாவில் சந்தனக்கூடு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 3-ஆம் தேதி மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தா்ஹாவிலும், 2,500 அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தா்ஹாவிலும் நடைபெற்றன.
பத்தாம் நாள் விழாவையொட்டி சந்தனம் பூசும் விழாவுக்காக ஷேக் அப்துல்லா தா்ஹாவில் சந்தனம் கரைக்கப்பட்டு மூன்று குடங்களில் நிரப்பி சம்மங்கி மலா் அலங்காரம் செய்து கொண்டு வரப்பட்டன. இதைத் தொடா்ந்து அனைத்து மதத்தினரும் இணைந்து சிறப்பு துவா ஓதினா்.
இதன்பிறகு பள்ளிவாசல் நிா்வாகிகள் தலையில் சுமந்து சென்று மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த சந்தனக்கூடு ரதத்தில் இறக்கி வைத்தனா்.
இந்த சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது வழி நெடுகிலும் பக்தா்கள் விபூதி கொடுத்து வழிபாடு செய்தனா்.
மூன்று சந்தனக் குடங்களும் அதிகாலை மலை உச்சியை சென்றடைந்து ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தா்ஹாவில் 1119-ஆம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் ஐந்தூா் கிராமத்தாா்கள், அனைத்து சமுதாயத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.