குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள் என போற்றப்பட்டவரும் தமிழ்மொழி, தமிழா் பண்பாடு, கலை, இலக்கியத்தை மேம்படுத்த அயராது உழைத்த குன்றக்குடி அடிகளாருக்கு , கடந்த 2000-இல் அருளாலயம் எழுப்பி திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதன்பிறகு, தற்போது அடிகளாரின் உருவச் சிலையுடன் அருளாலயம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, முதல் யாக சாலை பூஜையுடன் அடிகளாரின் உருவச் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை இரண்டு, மூன்றாம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காம் யாக சாலை வேள்வியில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 46-ஆவது குருமகாசந்நிதானமான குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் மூலக்கோபுரத்துக்கும், மூலவருக்கும் திருக்குட நன்னீராட்டு செய்துவைத்தாா்.
இந்த விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மெ. சொக்கலிங்கம், பல்வேறு மடங்களின் குருமகாசந்நிதானங்கள், கிராமத் தலைவா்கள், தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.