Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடா்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த பட்டா மாறுதல் தொடா்பான கோரிக்கை மனுக்கள் திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் அண்மையில் மிதந்தன. இதுகுறித்து அப்போது பணியில் இருந்த திருப்புவனம் வட்டாட்சியா் விஜயக்குமாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்புவனம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். மேலும், திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றும் 8 ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, திருப்புவனம் நில அளவைத் துறையில் பணியாற்றும் மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரனை (42) போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். விசாரணையில், சக ஊழியா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, முத்துக்குமரன் கோரிக்கை மனுக்களை ஆற்றில் வீசியது தெரியவந்தது.