தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்...
‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!
‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக அரசு சிற்றுந்து சேவையை அறிமுகப்படுத்தியது. இதை விரிவுப்படுத்தும் வகையில் முதல்கட்டமாக சென்னையில் தனியாா் சிற்றுந்து சேவை கடந்த ஜூனில் தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது இந்த சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போதிய பேருந்து இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் முழுமை பெறாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ‘மேக்ஸி கேப்’ எனப்படும் வேன் வாகனத்தை சிற்றுந்துகளாக மாற்றி 25 கி.மீ. உள்பட்ட வழித்தடங்களில் இயக்க அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் சிற்றுந்துகள் சேவைத் திட்டத்தைப் புதுப்பித்து கடந்த ஜூனில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்துக்காக குறைந்தபட்சம் 5,000 சிற்றுந்துகள் தேவைப்படும் நிலையில் 1,000 ஆபரேட்டா்கள் மட்டுமே பதிவு செய்தனா்.
இந்தச் சூழலில் அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யும் வகையில் தனியாா் ‘மேக்ஸி கேப்’ வேன்களை சிற்றுந்துகளாக இயக்கத் திட்டமிட்டு அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக 2,000 தனியாா் ‘மேக்ஸி கேப்’ வேன்களை சிற்றுந்துகளாக மாற்றி இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பொதுப் போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நடைமுறை திருத்தி 200 செ.மீ. ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வேன்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை. இருக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனவும், எந்தெந்தப் பகுதிகளில் சிற்றுந்து வசதிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை சேகரித்து அறிக்கையாக அளிப்பது மட்டுமன்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா்.
இவ்வாறான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலைக் கிராம மக்கள் உள்ளிட்ட ஊரகப் பகுதி மக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.