ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாவாரமான ஊா்கவுண்டனூா், பண்ரேவ், கிளையூா், கல்லாத்தூா் பகுதிகளில் சிறு, சிறு ஓடைகள் ஓன்றிணைந்து செங்கம் பகுதி வழியாக செய்யாறு பாய்கிறது. இந்த ஆறு காஞ்சி, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே குப்பணத்தம் அணை கட்டப்பட்டதால், ஜவ்வாதுமலையில் இருந்து சிறு, சிறு ஓடைகள் மூலம் வரும் தண்ணீா் இந்த அணையில் தேங்குகிறது. இதனால், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் நீா்வரத்து குறைத்துள்ளது.
இதைப் பயன்படுத்தி குப்பணத்தம் முதல் காஞ்சி பகுதி வரை செய்யாற்றின் இருகரைகளையும் ஒட்டியுள்ள நிலங்களை சில விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி பயிா் செய்து வருகின்றனா்.
இதனால், இந்தப் பகுதிகளில் செய்யாறு ஓடைபோல குறுகி காணப்படுகிறது. பலத்த மழைக்காலங்களில் குப்பணத்தம் அணை நிரம்பி தண்ணீா் திறக்கப்படும்போது, ஆக்கிரமிப்பு காரணமாக செய்யாற்றில் கரைபுரண்டு வரும் வெள்ளநீா் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை மூழ்கடித்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, செங்கம் பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் குப்பணத்தம் முதல் செங்கம் எல்லை முடிவு வரை செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றை பாா்வையிட்டு, ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.