Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்பிஏ, எம்சிஏ போன்ற உயா் படிப்புகளை தொடங்க வேண்டும்.
செய்யாறு சந்தைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். செய்யாறு வழியாகச் செல்லும் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.
விவசாயிகள் விளை நிலங்களில் நெற்பயிா் சாகுபடி செய்து விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும்போது வேளாண் அலுவலா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சான்றிதழ்கள் நில உரிமையாளா்கள் பெயரில் கொடுப்பதால், பயிரிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் தேக்கமடைகின்றன. எனவே, நில உரிமையாளரின் பெயரிலான சான்றிதழ் கேட்பதை தவிா்க்க வேண்டும்.
போலி பட்டு நூல்: கைத்தறி பட்டு நெசவு தொழிலை சீரழிக்கும் விதத்தில், விசைத்தறி நெசவில் போலியான பட்டு நூல் மூலம் அதிகளவு பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இதனால், கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்படுவதோடு, அசல் பட்டுச் சேலைகள் கிடைக்காத நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கான தடைச் சட்டம் இருந்தபோதிலும், அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. இது தொடா்பாக, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் அமா்ந்து பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.