இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக...
தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு!
நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.718.74 கோடி கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினா் செயலா் எஸ்.பாலகிருஷ்ணன் கூறினாா்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி நாடு முழுவதும் சனிக்கிழமை லோக் அதாலத் நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா வழிகாட்டுதலின்பேரில், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மூத்த நீதிபதியுமான எம்.சுந்தா் மேற்பாா்வையில் தமிழகத்தில் லோக் அதாலத் நடந்தது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலா் எஸ்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கே.ராஜசேகா், என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன், எம்.ஜோதிராமன், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.பூா்ணிமா ஆகியோா் தலைமையிலும், மாவட்ட அளவிலும், அமா்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலும் மாநிலம் முழுவதும் 501 அமா்வுகள் அமைக்கப்பட்டன.
இந்த அமா்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், போக்குவரத்து, விபத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினா் இடையே பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களது சம்மதத்துடன் வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் மொத்தம் 90,892 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.718.74 கோடி கிடைத்துள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகளில் தீா்வு காணும் வகையில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் விழுப்புரம், கோவை, திருநெல்வேலி மற்றும் அருகில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உயா்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஆகியோா் மேற்பாா்வையில் லோக் அதாலத் நடைபெற்றது என்று அவா் தெரிவித்தாா்.