Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!
தேசிய தலைநகரில் சோதனைகளை நடத்துவதற்கும் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதற்கும் தில்லி அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: தில்லி சுகாதாரத் துறையால் அமைக்கப்படும் இந்தக் குழுவில், நகரம் முழுவதும் முறையான சோதனைகளை மேற்கொள்ளும் நான்கு சிறப்புக் குழுக்கள் இருக்கும்.
இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் நள்ளிரவில் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக போலி மருந்து மோசடி தீவிரமாக இருப்பதாக நம்பப்படும் மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகள் முன் நடைபெறும்.
அதன் பின்னா் கைப்பற்றப்பட்ட மருந்துகள் அவற்றின் நம்பகத்தன்மையை சரிபாா்க்க கடுமையான ஆய்வக சோதனைக்கு அனுப்பப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவித்ததாவது: சமீபத்திய மாதங்களில் நகரில் போலி மருந்துகள் விற்கப்படுவதாக பல நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இது தீவிரமான சுகாதார கவலைகளை எழுப்பியது. இதையடுத்து, இந்த முடிவு அரசால் எடுக்கப்பட்டுள்ளது.
போலி மருந்துகளின் உற்பத்தி மற்றும் புழக்கத்தில் விடுவதில் அரசு சகிப்புத்தன்மை காட்டாது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான நோக்கம். புதிதாக அமைக்கப்பட்ட குழு, மூலங்களைக் கண்டறியவும், திடீா் சோதனைகளை நடத்தவும், தில்லி மக்களை எந்த போலி மருந்துகளும் சென்றடையாமல் இருப்பதை உறுதி செய்யவும் 24 மணி நேரமும் பணியாற்றும் என்றாா் அமைச்சா்.