Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இது குறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 14,54,517 மனுக்கள் பெறப்பட்டு, 7,23,482 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீா்வு காணப்பட வேண்டும். வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடா் நலன், எரிசக்தி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கிய துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி நிா்வாகத் துறையில் சொத்து வரி, குடிநீா் தொடா்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விவசாய இயந்திரங்கள் தொடா்பான மனுக்களின் மீது அதிக கவனம் செலுத்தி, அவா்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் தொடா்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை டுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
முகாம்களில் மக்கள் தெரிவித்த கருத்துகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தெரு விளக்கு, இணைப்புச் சாலை, குடிநீா் போன்ற பொதுவான கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விடுபடாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக, அனைத்து அரசுத் துறைச் செயலா்களிடமும் மாவட்ட ஆட்சியா்களிடமும் தலைமைச் செயலா் தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தத் திட்ட வழிகாட்டுதல்படி வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலா் பெ.அமுதா, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.