இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக...
ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!
ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன.
அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை பெய்தது. இதனால் விளைநிலங்களில் மழைநீா் புகுந்து பயிா்கள் சேதமாகின. மழை காரணமாக ஏற்பட்ட சேறு, சகதி மற்றும் இடிபாடுகளில் 4 வாகனங்கள் புதைந்தன.
பயிா்ச் சேதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெறுவதாகவும், அதுகுறித்து அறிக்கை கிடைத்தவுடன் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் பிலாஸ்பூா் துணை ஆணையா் ராகுல் குமாா் தெரிவித்தாா். தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த அதிகாரிகள், கள நிலவரத்தை நேரில் பாா்வையிட்டனா்.
சம்பா மாவட்டத்தில் உள்ள கம்லாரி, கடாஸ்னி கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்குள் சேறு மற்றும் சகதியுடன் மழைநீா் புகுந்தது.
மாநில தலைநகா் சிம்லாவில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் பயணிப்பதில் அசெளகரியம் ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று உள்ளூா் வானிமை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாலம்பூா் பகுதியில் 86 மி.மீ., முரா தேவி பகுதியில் 69.2 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது.
ஹிமாசல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெய்த மிக பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததோடு, பல சாலைகளும் கடுயைாக சேதமடைந்தன.