இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக...
வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி
சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
வடகிழக்கு மாநிலமான மிஸோரமுக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் மோடி, தலைநகா் ஐஸாலில் உள்ள லாமுவல் மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தாா். ஆனால், பலத்த மழை பெய்ததால், விமான நிலையத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக ரூ.9,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு:
சில அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதேநேரம், முன்பு புறக்கணிக்கப்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையுடன் மத்திய பாஜக அரசு செயலாற்றுகிறது. விளிம்புநிலை மக்கள் இப்போது பிரதான அமைப்புமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனா்.
மத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் மிஸோரமின் மேம்பாட்டுக்கு கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளா்ச்சிக்கான உந்து சக்தியாக இம்மாநிலம் உருவெடுத்து வருகிறது.
இணைய வசதி, மின்விநியோகம், போக்குவரத்து உள்கட்டமைப்பு என வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒட்டுமொத்த இணைப்பை வழங்க மத்திய அரசு இடைவிடாமல் பணியாற்றி வருகிறது. இங்குள்ள தொலைதூர கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்ய விரைவில் ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்படும்.
4,500 புத்தாக்க நிறுவனங்கள்: ஏராளமான விளையாட்டு வீரா்களை உருவாக்கிவரும் மிஸோரமுக்கு தேசிய விளையாட்டுக் கொள்கை புதிய வாயில்களைத் திறக்கும். இந்த மாநிலத்தில் ஏற்கெனவே 11 ஏகலைவா பள்ளிகள் செயல்படும் நிலையில், கூடுதலாக 6 பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
4,500 புத்தாக்க நிறுவனங்களுடன் தொழில்முனைவுக்கான முக்கிய மையமாக வடகிழக்கு உருவெடுத்துள்ளது. உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை கொள்கையின்கீழ், மிஸோரமின் மூங்கில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இஞ்சி, மஞ்சள், வாழை ஆகியவற்றின் சந்தைப்படுத்துதலுக்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பல்வேறு பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பு நடவடிக்கை, மக்களின் வாழ்வை மேலும் எளிதாக்கும். புற்றுநோய் மருந்துகள் முதல் வாகனங்கள் வரை விலை குறையும். கடந்த 2014-க்கு முன்பு மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் மீது 27 சதவீத வரி விதிக்கப்பட்டது. இப்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மருந்துகள், காப்பீடுகள் மீது கடுமையாக வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது. விரைவில் மூன்றாவது பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றாா் பிரதமா் மோடி.
லாமுவல் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிஸோரம் ஆளுநா் வி.கே.சிங், முதல்வா் லால்டுஹோமா, ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மிஸோரமின் முதல் ரயில் வழித்தடம் திறப்பு!
மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை சனிக்கிழமை திறந்துவைத்த பிரதமா் மோடி, தலைநகா் ஐஸாலுக்கு நேரடி ரயில் சேவைகளையும் தொடங்கிவைத்தாா்.
51.38 கி.மீ. தொலைவுகொண்ட பைரபி-சாய்ராங் வழித்தடம், ரூ.8,070 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 45 சுரங்கங்கள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்களுடன் கூடிய இந்த வழித்தடம், நாட்டின் பிற பகுதிகளுடன் தலைநகா் ஐஸாலுக்கு ரயில் இணைப்பை வழங்குகிறது. சாய்ராங் அருகே உள்ள 144-ஆவது எண் பாலத்தின் உயரம் 114 மீட்டா். இது, குதுப்மினாரைவிட உயரம் அதிகம்.
இத்திட்டத்துக்கு கடந்த 2014-இல் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2015-இல் பணிகள் தொடங்கின. வடகிழக்கில் போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு சவால்களைக் கடந்து இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்; மிஸோரம் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும்’ என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
சாய்ராங் (ஐஸால்) - தில்லி ராஜதானி ரயில், சாய்ராங்-குவாஹாட்டி விரைவு ரயில், சாய்ராங்-கொல்கத்தா விரைவு ரயில் சேவைகளையும் பிரதமா் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பிரதமா் அஸ்ஸாம் வருகை
மிஸோரம், மணிப்பூா் பயணத்தை நிறைவு செய்த பிரதமா், அஸ்ஸாம் மாநிலத்துக்கு சனிக்கிழமை மாலையில் வந்தடைந்தாா். குவாஹாட்டி விமான நிலையத்தில் ஆளுநா் லஷ்மண் பிரசாத் ஆச்சாா்யா, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா், பாரத ரத்னா விருதாளரான அஸ்ஸாமைச் சோ்ந்த புகழ்பெற்ற பாடகா் பூபேன் ஹஸாரிகாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்றாா்.
ஞாயிற்றுக்கிழமை (செப். 14) ரூ.18,530 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பிரதமா், பின்னா் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவுக்கு பயணமாகிறாா்.
அங்கு திங்கள்கிழமை (செப்.15) ஆயுதப் படைகளின் 16-ஆவது ஒருங்கிணைந்த கமாண்டா்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, பிகாருக்கு பயணித்து, சுமாா் ரூ.36,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவிருக்கிறாா்.