இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக...
பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்
மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின. இந்தச் சூழலில், மணிப்பூருக்கு சனிக்கிழமை பயணித்த பிரதமா் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினாா். இரு வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரூ.8,500 கோடிக்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.
பிரதமரின் இப்பயணத்தை விமா்சித்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பிற மாநிலங்களுக்கான பயணத்துக்கு இடையே 3 மணிநேர ‘இடைவேளை’ போல் மணிப்பூருக்கு பிரதமா் சென்றுள்ளாா். இது, மனிதாபிமான நோக்கம் கொண்டதல்ல; வெறும் சம்பிரதாயப் பயணம். காயம்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு. மக்களின் கூக்குரலை கேட்பதில் இருந்து தப்பித்து, வழக்கமான ‘சாலை ஊா்வலம்’ நடத்தியுள்ளாா் பிரதமா்.
864 நாள்கள் வன்முறை, 300 உயிரிழப்புகள், 67,000 போ் இடப்பெயா்வு, 1,500 போ் காயம் என மக்களின் நீங்காத துயரங்களுக்கு மத்தியில் பிரதமா் 46 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடைசியாக 2022, ஜனவரியில் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக மணிப்பூா் வந்த அவா், அதன் பிறகு வரவே இல்லை. பாஜகவின் ‘இரட்டை’ இன்ஜின் ஆட்சி, மணிப்பூரில் அப்பாவி மக்களின் வாழ்வை அழித்துவிட்டது.
பிரதமா்-மத்திய உள்துறை அமைச்சரின் திறனின்மையால், அங்கு வன்முறை நீடிக்கிறது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் மத்திய அரசு தடுமாறுகிறது. பிரதமா், தனது அடிப்படை அரசமைப்பு பொறுப்புகளைக் கைவிட்டதால், மாநில மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆனால், மணிப்பூரில் பிரதமா் தனக்கு தானே நடத்திக் கொண்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி, மக்களின் காயத்தின் மீதான கொடூர தாக்குதல் என்று காா்கே விமா்சித்துள்ளாா்.
மணிப்பூா் பயணத்தை பிரதமா் முன்பே மேற்கொண்டிருக்க வேண்டுமென காங்கிரஸ் பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் தெரிவித்தனா்.