Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மகாராஷ்டிர எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
துபையில் நடைபெற்று வரும் ஆசிய டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) மோதவுள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), சிவசேனை (உத்தவ் பிரிவு) ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே மாதம் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
இதைச் சுட்டிக்காட்டி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சச்சின் சாவந்த் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரத்தமும் நீரும் ஒருசேர பாய்ந்தோடாது என பிரதமா் மோடி கூறினாா். ஆனால் தற்போது கிரிக்கெட் ரன்களும் ரத்தமும் ஒருசேர அவா் அனுமதி அளித்துள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துக்கு அனுமதி அளித்தது ராஜாங்க ரீதியான தோல்வியாகும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை அவமதிக்கும் செயலாகும்’ என்றாா்.
இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே கூறியதாவது: ‘பிசிசிஐ தேசவிரோத அமைப்பாக மாறிவிட்டது. இந்தியாவுக்குள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானுடன் விளையாட வேண்டிய அவசியம் என்ன?
தொலைக்காட்சி வருவாய், விளம்பர வருவாய் அல்லது விளையாட்டு வீரா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக இந்தப் போட்டியை நடத்துவதா? இந்தியாவில் ஆசிய கோப்பை போட்டி நடைபெற்ற்காக அதை பாகிஸ்தான் புறக்கணித்தது. அதேபோன்ற நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளாதது ஏன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறுவது ஆளும் பாஜக அரசின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) செய்தித்தொடா்பாளா் ஜிதேந்திர அவாத் தெரிவித்தாா்.
நிலைப்பாட்டில் மாற்றமில்லை: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மகாராஷ்டிர பாஜக அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வாரியத்தின் பிரதிநிதியுமான ஆசிஷ் ஷேலாா், ‘பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது.
அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. மத்திய அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால் சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதை தடுக்க வலியுறுத்துவது எவ்வாறு சரியாகும்?’ என்றாா்.