பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்...
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்
ஆஸ்திரேலியா உள்பட எந்த ஒரு வலிமையான அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 14) சண்டீகரில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா உள்பட எந்த ஒரு வலிமையான அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: கடந்த ஓராண்டாக இந்திய அணி மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. இந்திய அணியின் கடின உழைப்புக்கான பலன் ஒவ்வொரு நாளும் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக உள்ளது. நீண்ட காலமாக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் தற்போது இந்திய அணியும் இணைந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியில் உள்ள அனைவரும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் என நினைக்கிறார்கள். கடந்த காலங்களில் கடினமாக உழைத்ததன் பயனை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, ஃபீல்டிங் மற்றும் ஃபிட்னஸில் இந்திய அணி சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. போட்டியின் முடிவுகளும் எங்களுக்கு சாதகமாக வரத் தொடங்கிவிட்டது.
ஆஸ்திரேலிய அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், இந்திய அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணி உள்பட எந்த ஒரு வலுவான அணியையும் எந்த ஒரு போட்டியிலும் எங்களால் வீழ்த்த முடியும் என நம்புகிறேன். இந்திய அணியில் உள்ள வீராங்கனைகள் பலரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறார்கள். எங்களால் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
Indian team captain Harmanpreet Kaur has said that they can defeat any strong team, including Australia.
இதையும் படிக்க: இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?