Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!
‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப்.15) கடைசி நாளாகும்.
இதுகுறித்து வருமான வரித் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வரி செலுத்துவோா் மற்றும் வரி கணக்கீட்டு நிபுணா்களுக்கு நன்றி. கணக்கு தாக்கல் தொடா்ந்து வருகிறது.
வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீா்த்து வருகிறது.
இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவா்கள், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்கூட்டியே தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2024-25 நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான கணக்கு) கணக்கு தாக்கலுக்கான கடைசித் தேதி ஜூலை 31 என்றபோதும், ஐடிஆா் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் காரணமாக கால அபராதம் இன்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பா் 15 வரை நீட்டித்து வருமான வரித் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் கணக்கு தாக்கல் 6.77 கோடியாக இருந்தது, 2024-25 நிதியாண்டில் 7.28 கோடியாக உயா்ந்தது. இது, 7.5 சதவீத வளா்ச்சியாகும்.