வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின்பு கடந்த மே 22-ஆம் தேதி உத்தரவை ஒத்திவைத்தது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தியது.
இதை எதிா்த்து தாக்கல் செய்யப்ட்ட 70-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று அம்சங்களுக்கு மட்டும் தடை விதிப்பது குறித்து விசாரித்தது.
அதாவது, நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்துகள், மரவு வழியாகப் பயன்படுத்தப்படும் வக்ஃப் சொத்துகள், பத்திரத்தின்படி அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்துகள் ஆகியவற்றை ரத்து செய்ய அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் உள்ளதா?
மாநில வக்ஃப் வாரியங்கள், மத்திய வக்ஃப் கவுன்சில் ஆகியவற்றில் பதவி உறுப்பினா்களைத் தவிர முஸ்லிம்களே இடம்பெற வேண்டும்.
வக்ஃப் சொத்துகளை மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு, அரசு சொத்தா என அறிவிக்கப்படும் வரை, அது வக்ஃப் சொத்தாக கருதப்படாது ஆகிய மூன்று சட்ட அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘வக்ஃப் என்பது மதச்சாா்பற்ற கருத்தாகும்; அதை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக கருதி தடை விதிக்க முடியாது. இஸ்லாத்தில் வக்ஃப் கட்டாய நடைமுறையல்ல’ என்று வாதிட்டாா்.
மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபில், ‘நீதிமன்ற நடைமுறைகளின்றி வக்ஃப் சொத்துகளைக் கையகப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை இது’ என்று வாதிட்டாா்.