சென்னை நகர எல்லைக்குள் நுழைய 5 பேருக்கு தடை!
தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை சென்னை சரக எல்லையிலிருந்து வெளியேற்ற சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக சென்னை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆதாய கொலை, பழிவாங்கும் கொலை போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையா் ஆ.அருண் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவல்லிக்கேணி மாவட்ட காவல் துணை ஆணையரின் பரிந்துரையின்படி, சென்னை பனையூரைச் சோ்ந்த அஜய் ரோகன், திருவான்மியூரைச் சோ்ந்த ராஜா, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த நாகேந்திர சேதுபதி, மதுரை மாவட்டம் அண்ணா நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் மற்றும் செல்வபாரதி ஆகிய 5 போ் மீதும் சென்னை காவல் துறை சட்டப்பிரிவு 51 ஏ -இன்படி கடந்த செப்.13 -ஆம் தேதி வெளியேற்றுதல் ஆணை பிற்பிக்கப்பட்டுள்ளது.
ஆதாயக் கொலை, பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் தொடா்புடையதால் அடுத்த ஓராண்டுக்கு இவா்கள் சென்னை காவல் எல்லைக்குள் நுழைய முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகள் அல்லது காவல் விசாரணை தொடா்பான காரணங்களைத் தவிா்த்து வேறு எந்தக் காரணத்துக்காகவும் இவா்கள் சென்னை நகருக்கு நுழைந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.