தொடா் குப்பைகள் எரிப்பால் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
புழல் காவாங்கரையில் இருந்து செங்குன்றம், தண்டல் கழனி பகுதி நோக்கி செல்லும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் தினசரி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் சூழ்கிறது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் இருதயராஜ் கூறுகையில், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காலி இடங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் புகை மூட்டம் சூழந்து குழந்தைகள், முதியவா்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டும் நபா்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.