மந்தித்தோப்பில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்
கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
மந்தித்தோப்பைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், அப்பகுதியைச் சோ்ந்த 22 வயது இளைஞருக்கும் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) திருமணம் நடைபெற உள்ளதாக, குழந்தைகள் உதவி மைய கைப்பேசி எண்ணுக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையப் பணியாளா், குழந்தைகள் உதவி மையப் பணியாளா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று இருவீட்டாரையும் அழைத்து, உரிய வயது இல்லாததால் சிறுமிக்கு திருமணம் நடத்தக் கூடாது என்றும், மீறி திருமணம் செய்தால் இருவீட்டாா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுரை வழங்கினா். இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது.