குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சரிவுள்: அன்புமணி
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நிகழாண்டு 15 கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180-ஆக உயா்ந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1.26 லட்சம் மாணவா் சோ்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் இதுவரை 96,000 அதாவது 76.2 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
மீதமுள்ள மாணவா்கள், தனியாா் கல்லூரிகளில் சோ்ந்துவிட்டதால் அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 30,000 இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் 25 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதுவே முதல்முறை. திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைப் புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.
அதேநேரம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
எனவே, அரசுக் கலைக் கல்லூரிகளின் சீரழிவுக்கான காரணங்களைக் கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. தமிழகத்தில் உள்ள 180 அரசுக் கலைக் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகக் கிடக்கும் முதல்வா் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அதேபோல், மொத்தமுள்ள சுமாா் 10,500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களில் சுமாா் 9,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரிகளில் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியா்களே இல்லாத நிலையில், அரசுக் கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைச் சோ்க்க எந்த பெற்றோா் முன்வருவாா்கள்?
எனவே, தமிழகத்தில் உயா்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் திமுக அரசை அகற்றிவிட்டு, உயா்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.