தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மகன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராகுல் காந்தி பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
தந்தை–மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், நேற்று (14-ம் தேதி) இரவில் இருவருக்கும் மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் முனியசாமி மது பாட்டிலை உடைத்து ராகுல் காந்தியை குத்த முயன்றார். அதைத் தடுக்கும்போது, ராகுல் காந்தி அவரது கையை கடித்ததாகக் கூறப்படுகிறது.
மதுபோதையில் இருந்த முனியசாமி அங்கேயே படுத்து உறங்கினார். ஆத்திரத்தில் இருந்த ராகுல் காந்தி, வீட்டில் இருந்த பிளேடைக் கொண்டு முனியசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர், கையில் காயத்துடன் இருந்த ராகுல்காந்தி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் வீட்டில் நடந்ததைக் கூறிவிட்டு நேரடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று தனது தந்தையைக் கொலை செய்துவிட்ட விவரத்தை கூறி சரணடைந்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முனியசாமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ராகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி அதிக மது போதையில் இருந்ததால் போலீஸாரால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது.
போதை தெளிந்த பிறகுதான் தந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்துக் கேட்க முடியும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.