``வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்'' - அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்
கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியிருந்ததாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் இரண்டு நாள்களுக்கு முன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் கோ.தேவராஜன், அண்ணாமலை மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார் என அவர் கூறியுள்ளார். இதற்காக அண்ணாமலைக்கு எதிராக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரில், “பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி திருமதி அகிலா ஆகியோர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தமை மற்றும் நிதி மோசடி குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.
மேலும், குண்டர் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும். சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அண்ணாமலை மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், அண்ணாமலை மீது இப்படிப் புகார் எழுந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.