கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அரசிடம் பதிவு செய்வது கட்டாயம்
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வகை அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள், மத்திய வா்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (ஏபிஇடிஏ) பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனை சோ்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் பதிவுக்கு பிறகே ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது, வேளாண் பொருள்களின் ஏற்றுமதி தொடா்பான விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு கொண்டதாகும்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நாட்டின் அரிசி ஏற்றுமதி மதிப்பு 4.7 பில்லியன் டாலா்களாக அதிகரித்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், இது 6.4 சதவீத அதிகரிப்பாகும்.
இதேபோல், குறிப்பிட்ட வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை இக்கட்டுப்பாடு தொடரும் என்று வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து கற்கள் பதிக்காத வெள்ளி நகைகளின் இறக்குமதி அதிகரித்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.