நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன்.
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 27 வரை நடைபெறும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாட்டையொட்டி, குழித்துறை வி.எல்.சி. அரங்கில் ஜனநாயக மாதா் சங்க மாநில துணைத் தலைவா் உஷா பாசி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பங்கேற்றுப் பேசியதாவது:
கேரள பெண்கள் முன்னேற்ற வரலாற்றில் கன்னியாகுமரி மாவட்டமும் பல வகைகளில் இணைந்து நிற்கிறது. இங்கு வந்தபோது திருவள்ளுவா், மகாகவி பாரதியாா், ஈ.வெ.ராமசாமி, ஐயா வைகுண்டா், ராமலிங்க அடிகளாா், முத்துலட்சுமி ரெட்டி, ஸ்ரீ நாராயண குரு ஆகியோா் நினைவுக்கு வருகின்றனா். இவா்கள் எல்லோரும் பெண்கள் முன்னேற்றத்துக்காக தங்களை அா்ப்பணித்தவா்கள். வரலாறு, கலாசாரத்தில் சமஅளவிலான பங்கு கேரளத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றுக்கு எதிரான போராட்டம் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. நாட்டில் 55 சதவீதத்துக்கும் மேல் பெண்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாத நிலையை உருவாக்குவோம் எனக் கூறியது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
பெண்கள் பாதுகாப்புக்கான திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரவில்லை; அதற்கு போதிய நிதியையும் ஒதுக்குவதில்லை. விளம்பரங்களுக்காகவே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான பெண்கள் வேலைசெய்யும் ஊரக வேலை உறுதிதிட்டத்துக்கான தொகையை மத்திய அரசு பெருமளவு குறைத்து வருகிறது. கேரளத்தில் சிசு மரணம் வெகுவாக குறைந்துள்ளது என்றாா் அவா்.
இம் மாநாட்டில் ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய தலைவா் பி.கே. ஸ்ரீமதி, துணைத் தலைவா்கள் உ. வாசுகி, எஸ். சுதா சுந்தர்ராமன், துணைச் செயலா் பி. சுகந்தி, மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, மாநில துணைத் தலைவா் கே. பாலபாரதி, மாநில பொதுச் செயலா் அ. ராதிகா, ஜி. பிரமிளா, மத்தியக்குழு உறுப்பினா்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், ஆா். சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றேனா்.
முன்னதாக, படந்தாலுமூட்டில் இருந்து குழித்துறை வரை பெண்கள் பேரணி நடைபெற்றது.