குமரி பகவதியம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி அபிஷேகம்
கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு யானையில் புனித நீா் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 2 ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின் அனைத்து நாள்களும் விவேகானந்தபுரம் தெற்கு குண்டல் சந்திப்பு காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் உள்ள சக்கர தீா்த்தக் குளத்திலிருந்து புனித நீா் எடுத்து, யானை மீது கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக யானை கொண்டு வர வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கோயில் ஊழியா் ஒருவா் புனித நீா் எடுத்து வந்தாா். ஆனால், பாரம்பரிய முறைப்படி புனித நீா் எடுத்து வர பக்தா்கள் தொடா்ந்து வலியுறுத்தினா்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறையினரிடம் அனுமதி பெற்று திருச்சி சமயபுரத்திலிருந்து ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி அபிஷேகம் செய்யப்பட்டது.
எம்எல்ஏ-க்கள் என். தளவாய் சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாவட்டச் செயலா் சி.எஸ். சுபாஷ், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் தாமரை தினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் சொ. முத்துக்குமாா், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தினி பகவதியப்பன், மாநில தேமுதிக சமூக வலைதள அணி துணைச் செயலா் என். சிவகுமாா் நாகப்பன், மாவட்ட தேமுதிக செயலா் அமுதன், கன்னியாகுமரி நகா்மன்ற துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், முன்னாள் துணைத் தலைவா் பா. தம்பித்தங்கம், நகா்மன்ற உறுப்பினா்கள் இக்பால், சிவசுடலைமணி, ஆட்லின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.